hamburgerIcon

Orders

login

Profile

STORE
Skin CareHair CarePreg & MomsBaby CareDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Labour & Delivery arrow
  • நீங்கள் சுகப்பிரசவத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? அதன் சாதக பாதகங்களை தெரிந்து கொள்ளவும் | Why Should You Choose A Vaginal Delivery? Know The Pros And Cons in Tamil arrow

In this Article

     நீங்கள் சுகப்பிரசவத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? அதன் சாதக பாதகங்களை தெரிந்து கொள்ளவும் | Why Should You Choose A Vaginal Delivery? Know The Pros And Cons in Tamil

    Labour & Delivery

    நீங்கள் சுகப்பிரசவத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? அதன் சாதக பாதகங்களை தெரிந்து கொள்ளவும் | Why Should You Choose A Vaginal Delivery? Know The Pros And Cons in Tamil

    1 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கர்ப்ப காலம் என்பது புதியதொரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வரும் ஒரு அழகான பயணம் ஆகும். இறுதியாக, உங்கள் வாழ்வின் புதியதொரு அத்தியாயத்தை நீங்கள் மகிழ்ச்சியுடன் தொடங்குவதற்கு ஆயத்தமாக இருப்பீர்கள். எனினும், முடிவில்லாத, விலைமதிப்பில்லாத நிகழ்வுகளுக்கு மத்தியில், இந்த காலகட்டத்தில் சில சங்கடங்களும் உள்ளன. கர்ப்பமாக இருக்கும் போது, முன்கூட்டியே பிரசவத்தை பற்றி நீங்கள் கூடுமானவரையில் தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். ஆயினும், அந்த சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகிக்க முடியாது. பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்பதால், நீங்கள் சுகப்பிரசவத்தையே தேர்வு செய்ய விரும்புவீர்கள். எனினும், சுகப்பிரசவம் தொடர்பான விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமானது, இது உங்கள் பிரசவத்தின் போது நீங்கள் சற்று ஆயத்தமாக இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

    சுகப்பிரசவம் என்றால் என்ன?(What Is A Vaginal Delivery in Tamil)

    சுகப்பிரசவம் என்பது ஒரு பெண் தன்னுடைய பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை பெற்றுக் கொள்வதை குறிக்கிறது. இது பொதுவான, பெரும்பாலோரால் விரும்பப்படுகிற ஒரு நடைமுறையாகும். ஏனென்றால் இதில் குறைவான அபாயங்கள் மட்டுமே உள்ளது. அது மட்டுமின்றி தாய்க்கும், குழந்தைக்கும் இந்த முறையால் நிறைய நன்மைகளும் விளையும். சுகப்பிரசவத்தின் போது, உங்கள் கர்ப்பப்பை மெலிதாக சுருங்கி, கருப்பை வாயை திறந்து, உங்கள் குழந்தையை பெண்ணுறுப்பு அல்லது பிறப்பு வழித்தடத்தின் வழியாக வெளியே தள்ளும். கர்ப்ப காலத்தின் 37 முதல் 42 வாரங்களுக்கு இடையே தான் பெரும்பாலும் சுகப்பிரசவம் நடக்கிறது.

    சுகப்பிரசவத்தின் வகைகள் என்னென்ன?(What Are The Types Of Vaginal Delivery in Tamil)

    சுகப்பிரசவத்தின் வெவ்வேறு வகைகள் பின்வருமாறு:

    1. புறத்தூண்டுதலற்ற சுகப்பிரசவம் (Spontaneous vaginal delivery)

    பிரசவ வலியை தூண்டும் மருந்துகளின்றி சுகப்பிரசவம் சுயேச்சையாக நடைபெறும்.

    2. தூண்டப்படும் சுகப்பிரசவம் (Induced vaginal delivery)

    மருந்துகளோ அல்லது பிற முறைகளோ பிரசவ வலியை தூண்டி, உங்கள் கருப்பை வாயை ஆயத்தப்படுத்தும். இது பிரசவ வலியை தூண்டும் முறை என்றும் சொல்லப்படுகிறது.

    3. புறத்தூண்டுதலை கொண்ட சுகப்பிரசவம் (Assisted vaginal delivery)

    இடுக்கி அல்லது வாக்யூம் சாதனம் மூலம் உங்கள் குழந்தையை வெளியே எடுத்து செய்யப்படும் இந்த சுகப்பிரசவ முறைக்கு, புறத்தூண்டுதலை கொண்ட சுகப்பிரசவம் என்று குறிப்பிடப்படுகிறது. புறத்தூண்டுதலற்ற சுகப்பிரசவம், தூண்டப்படுகிற சுகப்பிரசவம் ஆகிய இரண்டுமே செய்யப்படலாம்.

    சுகப்பிரசவத்தின் நிலைகள் என்னென்ன?(What Are The Stages Of Vaginal Delivery in Tamil)

    சுகப்பிரசவத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்: பிரசவ வலி, குழந்தை பிறப்பு மற்றும் பனிக்குடத்தை வெளியேற்றுவது.

    1. பிரசவ வலி (Labour)

    பிரசவ வலியின் முதல் நிலை கருப்பை சுருங்குவதிலிருந்து தொடங்குகிறது, பின்பு கருப்பை வாய் பத்து சென்டிமீட்டருக்கு விரிவடைந்து, 100% இயல்பு நிலைக்கு திரும்புவதோடு முடிவடைகிறது. பிரசவ வலியானது ஆரம்ப நிலை வலி, உந்தப்பட்ட வலி மற்றும் இடைமாறுபாட்டுக்குரிய வலி என்று வகைப்படுத்தப்படுகிறது.

    2. ஆரம்ப நிலை வலி (Early labour)

    உங்களுக்கு சுருக்கங்கள் தொடங்கி, உங்கள் கருப்பை வாய் விரிவடைந்து, மூடிக் கொண்டிருக்கும் போது, ஆரம்ப நிலை வலியின் இறுதியில் உங்கள் கருப்பை வாயானது ஏறக்குறைய ஐந்து சென்டிமீட்டர் அளவிற்கு விரிவடைந்திருக்கும்.

    3. உந்தப்பட்ட வலி (Active labour)

    இந்த கட்டத்தில், சுருக்கங்கள் 1 நிமிடம் வரைக்கும் திடமாக நீடித்திருக்கும், மேலும் மூன்று நிமிட இடைவெளியில் தொடரும். சில கர்ப்பிணிப் பெண்கள் இந்த சமயத்தில் உணர்விழப்பு மருந்தினை போட சொல்லி வேண்டிக் கொள்வார்கள், ஏனெனில் இந்த சுருக்கம் மிகவும் வலி நிறைந்ததாகவும், தாங்கிக் கொள்ள முடியாததாகவும் இருக்கும். மருத்துவர்கள் பிரசவ வலியை துரிதப்படுத்துவதற்கு ஆக்சிடோஸின் கூட கொடுக்கலாம்.

    4. இடைமாறுபாட்டுக்குரிய வலி (Transitional labour):

    உங்கள் கருப்பை வாயானது பத்து சென்டிமீட்டர் அளவிற்கு விரிவடைவதற்கு சற்று முன்னர் இது நடக்கிறது. இது சிறிய, ஆயினும் கடுமையான கட்டமாகும். இந்த சமயத்தில் உங்கள் சுருக்கங்கள் மிக வேகமாக துவங்கி, ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இந்த கட்டத்தில் நீங்கள் வியர்த்து போகலாம், வாந்தி எடுக்கலாம் அல்லது நடுக்கமாக உணரலாம், நீங்கள் வெளித் தள்ளுவதற்கு சற்று முன்னர் இது நிகழ்கிறது.

    5. பிறப்பு (Birth)

    நீங்கள் பத்து சென்டிமீட்டரை அடையும் போது குழந்தை பிறக்கின்ற கட்டம் ஆரம்பமாகிறது, பின்பு பெண்ணுறுப்பு வழியாக உங்கள் குழந்தை பிறப்பதோடு முடிவடைகிறது. பிரசவ வலியின் இந்த கட்டத்தில், நீங்கள் திடமான சுருக்கங்களை உணர்வீர்கள், பின்பு வெளித்தள்ள தொடங்குவீர்கள். குறிப்பாக உணர்விழப்பு மருந்து எடுத்துக் கொண்ட பின், நீங்கள் சுருக்கங்களை உணர்வில்லையென்றால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார். மேலும், இந்த கட்டம் சில நிமிடங்களோ அல்லது சில மணி நேரமோ நீடிக்கலாம். நீங்கள் ஏற்கனவே சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றிருக்கும் போது, பெரும்பாலும் சீக்கிரமாகவே குழந்தை பிறப்பு நிகழ்ந்து விடும்.

    6. பனிக்குடத்தை வெளியேற்றுவது (Delivering the placenta)

    பனிக்குடத்தை வெளியேற்றுவது தான் பிரசவ வலியின் இறுதி கட்டமாகும், இது குழந்தை பிறப்பிற்கு பின் நிகழ்கிறது. இது உங்கள் பெண்ணுறுப்பு வழியாக உங்கள் குழந்தையானது வெளியேறியதில் தொடங்கி, உங்கள் பனிக்குடம் வெளியேறுவதோடு முடிவடைகிறது. இந்த கட்டத்தில் மருத்துவர் உங்களை நன்கு வெளித் தள்ளுவதற்கு கேட்டுக் கொள்வார். சாதாரணமாக, இது உங்கள் குழந்தை பிறந்து சில நிமிடங்களுக்கு பிறகு தொடங்கி, 30 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். ஒவ்வொருவருக்கும் பிரசவ வலியும், குழந்தை பிறப்பும் வேறுபடும் என்பதை கவனத்தில் கொள்வது முக்கியமானது.

    குறைந்த நேரத்தில் பிரசவம் நடப்பதும் அல்லது நீண்ட நேரம் நீடிப்பதும் சில தனிப்பட்ட காரணிகளை சார்ந்துள்ளது. உதாரணத்திற்கு, ஒரு வேளை நீங்கள் உணர்விழப்பு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், இந்த வகை மருந்து எடுத்துக் கொள்ளாத பெண் அனுபவிக்கும் அளவு வலியை நீங்கள் உணர மாட்டீர்கள். மேலும், இது உங்கள் முதல் குழந்தையாக இருப்பதால் உங்கள் பிரசவத்திற்கு நீண்ட நேரம் எடுக்கலாம். குழந்தையின் அளவு, எடை மற்றும் இருக்கும் நிலை போன்ற அம்சங்களும், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் கருப்பை வாயை விரிவடைய செய்ய இயலும் என்பதுவும், சுகப்பிரசவத்திற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை தீர்மானிக்கின்றன.

    சுகப்பிரசவத்தின் சாதகங்கள் (Pros Of Vaginal Delivery in Tamil)

    இது இயற்கைவழி பிறப்பு முறையாக இருப்பதாலும், எல்லோராலும் விரும்பப்படுவதாலும், தாய், குழந்தை ஆகிய இருவருக்குமே சுகப்பிரசவத்தினால் நிறைய சாதகங்கள் உள்ளன.

    தாய்க்கு(For Mother)

    • தாய் இந்த நடைமுறையில் சுறுசுறுப்பாக இணைந்து செயல்படுவதால், நேர்மறையான, ஆற்றல் மிக்க அனுபவத்தை பெறுகிறாள்.

    • பிரசவ நடைமுறையின் போது உள்ள சருமத் தொடர்பின் காரணமாக, தாய்க்கும், குழந்தைக்கும் நல்லதொரு பிணைப்பு உருவாக ஏதுவாகிறது.

    • பொதுவாகவே குணமடைந்து மீண்டு வருவது விரைவாக நிகழும், பிரசவம் ஆன அதே நாளில் எந்தவொரு வலியுமின்றி, குழந்தை பெற்ற தாய் சாதாரணமாக நடக்க முடியும். அறுவை சிகிச்சை நடைமுறையில் குறைந்தபட்சம் ஒரு நாள் ஓய்வு தேவைப்படும். பொதுவாக, சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்து விடுவார்கள்.

    • சுகப்பிரசவத்தில் வடு ஏற்படுவதில்லை அல்லது தையல் பற்றிய கவலையில்லை, மருத்துவமனைக்கு செல்வதும் குறைவாகவே இருக்கும். எபிசியோடமில் செய்யப்படும் போது, சிறிது கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும், ஆயினும் இது ஒப்பீட்டளவில் வேகமானது, மேலானது.

    • நீங்கள் மருத்துவமனைக்கு பதிலாக, உங்கள் வீட்டில் பிரசவிப்பதை கூட தேர்வு செய்யலாம். எனினும், இது உங்கள் மருத்துவரிடம் முறையாக கலந்தாலோசித்த பிறகே பரிசீலிக்கப்பட வேண்டும்.

    • வருங்காலத்தில் பிரசவ சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.

    குழந்தைக்கு(For Baby)

    • சுகப்பிரசவத்தை தேர்வு செய்யும் போது, கர்ப்பப்பையிலிருந்து குழந்தை வெளி வருவதற்கு தயாராக இருக்கும்.

    • பெண்ணுறுப்பின் வழியாக வெளித் தள்ளப்படும் போது, குழந்தையின் நுரையீரல்கள் அவற்றில் நிரம்பியுள்ள பனிக்குட நீரை வெளித் தள்ளுகின்றன, இதன் மூலம் இயல்பான சுவாசம் ஏற்படவும், சுவாசக் கோளாறுகள் குறைவாக ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது.

    • சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, சிசேரியனில் பிறப்பதை விடவும் குறைவான சிக்கல்களே ஏற்படுகின்றன. ஒவ்வாமை பிரச்சினைகளும் மிகக் குறைவாக ஏற்படுகின்றன, சீக்கிரமாகவே குழந்தைகள் தாய்ப்பால் அருந்த தொடங்குகிறார்கள்.

    • பிறப்பு வழித்தடத்தின் வழியாக வெளி வரும் போது குழந்தை நல்ல பாக்டீரியாவை சுவாசிக்கிறது, இது குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

    சுகப்பிரசவத்தின் பாதகங்கள்(Cons Of Vaginal Delivery in Tamil)

    சுகப்பிரசவத்தில் நன்மைகள் இருப்பினும், அதில் சில அபாயங்களும் இருக்கின்றன.

    தாய்க்கு (For Mother)

    • இந்த வழக்கமான பிரசவ முறையில், குழந்தை பிறக்கப் போகும் நேரத்தை நிச்சயமாக சொல்ல முடியாது, பிரசவம் முழுக்க தாயின் உடலை பொறுத்து இருப்பதால் அதனை திட்டமிடுவதற்கான வாய்ப்புகளே இல்லை.

    • பிரசவ வலி ஏற்படும் சமயத்தில் அதிக மன அழுத்தத்தையும், வேதனையையும் சந்திக்க வேண்டி வரும், பிரசவ கால நேரம் இவ்வளவு தான் என குறிப்பிட்டு சொல்ல முடியாது, சில மணி நேரங்களில் முடிந்து விடலாம் அல்லது நீண்ட நேரத்திற்கு நீடிக்கலாம். ஆயினும், மருத்துவரின் ஆலோசனைப்படி சில மருந்துகளின் மூலம் இதனை சமாளிக்கலாம்.

    • சில சமயங்களில், சில சிக்கல்களின் காரணமாக குழந்தையின் இதயத் துடிப்பு விகிதம் குறைந்து போய் விடும். இப்பேற்பட்ட சூழ்நிலைகளில், தாய்க்கு உணர்விழப்பு மருந்து கொடுத்து அவசர நிலையில் சிசேரியன் செய்யப்படும்.

    • சுகப்பிரசவத்திற்கு பிறகு, பிரசவத்தின் போது தாய்க்கு ஏற்பட்ட காயங்களின் காரணமாக சில பாலியல் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    • சில சமயங்களில், தாய்க்கு பிரசவத்தின் போதோ அல்லது பிறகோ அதிகபட்சமாக அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய முறையில் இரத்தப்போக்கு ஏற்படக் கூடும், இது ஹிமோரேஜ் எனப்படுகிறது. சில சமயங்களில், பிரசவத்திற்கு பிறகு கால்கள் அல்லது இடுப்பெலும்பில் இரத்த உறை கட்டிகள் கூட ஏற்பட்டு விடும்.

    • சில பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகான பிரீ எக்லாம்ப்சியா கூட ஏற்படலாம், அதாவது அதிகப்படியான இரத்த அழுத்தம் ஏற்படும்.

    குழந்தைக்கு (For Baby)

    • சில சமயங்களில், குழந்தை பெரியதாக அல்லது கனமாக இருக்கும் போது, சக்ஷன் கப் (உறிஞ்சும் கோப்பை) அல்லது ஃஃபோர்செப் (இடுக்கி) பிரசவத்தின் போது தேவைப்படும்.

    • பிறப்பு வழித்தடத்தின் வழியாக குழந்தை வெளி வரும் போது குழந்தைக்கு காயம் ஏற்பட்ட சில நிகழ்வுகளும் உள்ளன.

    சுகப்பிரசவத்தை தவிர்ப்பதற்கான காரணங்கள் (Reasons To Avoid Vaginal Delivery in Tamil)

    சுகப்பிரசவம் தான் பெரும்பாலும் விரும்பப்படும் வழிமுறையாகும். எனினும், சில சமயங்களில் சுகப்பிரசவ முறை உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக ஆகி விடும். கீழ்க்கண்ட சூழ்நிலைகளில், உங்கள் மருத்துவர் சிசேரியன் செய்வதற்கு பரிந்துரை செய்யலாம்

    • குழந்தையின் கால்களோ அல்லது புட்டமோ பெண்ணுறுப்பின் வழியாக முதலில் வெளி வரும் நிலையிலிருப்பது,

    • உங்கள் பனிக்குடம் அல்லது பனிக்குடத்தின் முன்காட்சியில் ஏதேனும் பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படுவது,

    • உங்களுக்கு சிகிச்சையளிக்கப்படாத உடல்நலக்கேடு அல்லது ஹெர்ப்ஸ் வைரஸினால் திறந்த பிறப்புறுப்பு காயங்கள் அல்லது நாள்பட்ட உடல்நிலை கோளாறு இருப்பது.

    சுகப்பிரசவம் வலி நிறைந்ததாக இருக்குமா?(Is A Vaginal Delivery Painful in Tamil)

    சுகப் பிரசவம் வலி நிறைந்தது தான், ஆயினும் வலியை கையாள்வதற்கு பல மாற்று ஏற்பாடுகள் உள்ளன. சில பெண்கள் தங்கள் இடுப்புக்கு கீழ் உள்ள உடல் பகுதி மரத்துப் போவதற்கு வசதியாக உணர்விழப்பு மருந்தினை செலுத்திக் கொள்கிறார்கள். எனினும், உங்கள் மருத்துவரிடம் வலி நிவாரணத்திற்கான வழிகளை விவாதித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

    சுகப்பிரசவத்திற்கு பிறகு உங்களுக்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது?(What Side Effects Can You Expect After A Vaginal Delivery in Tamil)

    குழந்தை பிறந்தவுடன் உங்களுக்கு உடல் ரீதியான, உணர்வு ரீதியான மாறுதல்கள் ஏற்படலாம். மலச்சிக்கல், வீங்கிய மார்பகங்கள், உங்கள் பெண்ணுறுப்பில் வலி மற்றும் புண், மனநிலை ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்), பெண்ணுறுப்பில் இரத்தப் போக்கு, மூலநோய், தலைவலி, மேற்புற உடலில் தோன்றும் வெம்மையான உணர்ச்சி (ஹாட் ஃப்ளாஷஸ்) அல்லது வியர்ப்பது, தசைப்பிடிப்பு மற்றும் குழந்தை பிறப்புக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு (லோச்சியா) போன்ற அறிகுறிகள் பொதுவாகவே தோன்றும். சில பெண்களுக்கு மகப்பேறுக்கு பின்னர் ஏற்படும் மனச் சோர்வு அல்லது பதற்றம் கூட ஏற்படும். ஹார்மோன் மாறுபாடுகளின் காரணமாக, சுகப்பிரசவத்திற்கு பின்னர் முதல் சில வாரங்களில் சோகம், அழுகை அல்லது பிற உணர்வுகள் கூட தோன்றலாம். உங்கள் குழந்தை பிறந்து பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு பிறகும் கூட நீங்கள் சோகமாகவோ, பதற்றமாகவோ உணர்ந்தாலோ அல்லது மனநிலை ஊசலாட்டம் இருந்தாலோ உங்கள் மருத்துவரை சந்தித்து கலந்தாலோசிக்கவும்.

    சுகப்பிரசவத்திற்கு பின் குணமாவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?(How Long Does It Take To Heal From Vaginal Delivery in Tamil)

    சுகப்பிரசவத்திற்கு பின்னர் குணமாகி மீண்டு வருவதற்கான காலம் ஒவ்வொருவருக்கும் வேறுபடக் கூடியது. பொதுவாக, சிசேரியனை விடவும் சுகப்பிரசவத்தில் சீக்கிரமாக குணமடைந்து விடலாம். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் குணமடைகிறீர்கள் என்பதை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதில் ஒன்று, உங்கள் பெண்ணுறுப்பு கிழிந்து போயிருந்து, அது எவ்வளவு கடுமையாக கிழிந்திருக்கிறது என்பதை பொறுத்தது. ஒரு வேளை உங்களுக்கு கிழிந்திருந்தால், பல வாரங்களுக்கு உங்களுக்கு காயமாக இருக்கும். கழிவறைக்கு செல்வது, உட்காருவது, நடப்பது அல்லது தினசரி வேலைகளை செய்வது கூட வேதனையாகவும், கடினமாகவும் இருக்கும். எனினும், கிழிந்த இடத்தில் வீக்கமும், அரிப்பும் ஏற்படுவது இயல்பானது தான். பல பெண்களுக்கு பெண்ணுறுப்பு கிழிந்திருக்காவிட்டால் கூட, வீக்கம், கன்றிப் போவது மற்றும் காயம் போன்றவை அவர்களின் பெண்ணுறுப்புப் பகுதியில் ஒரு வாரத்திற்கோ அல்லது இரண்டு வாரத்திற்கோ இருக்கும். குளிர்ச்சியாக ஒத்தடம் கொடுப்பது அல்லது குளிர்ச்சியான சானிட்டரி பேடுகளை உங்கள் பெண்ணுறுப்புப் பகுதியில் வைப்பது சற்று இதமாக இருக்கும்.

    சுகப்பிரசவத்திற்கு பிறகு உங்களுக்கு எவ்வளவு நேரத்திற்கு இரத்தப் போக்கு ஏற்படும்? (How Long Do You Bleed After A Vaginal Delivery in Tamil)

    சுகப்பிரசவத்திற்கு பிறகு இரத்தப் போக்கு ஏற்படுவது அந்த நபரை பொறுத்தது. சில பெண்களுக்கு மற்ற பெண்களை விடவும் குறைவான நேரத்திற்கு இரத்தப் போக்கு ஏற்படும். குழந்தை பிறந்து பல வாரங்களுக்கு பின் இரத்தப் போக்கு ஏற்படுவது இயல்பானது தான். உங்களுக்கு இரத்தப் போக்கு போக போக அதிகரித்தாலோ அல்லது பிரசவமாகி பல வாரங்களுக்கு பின்னரும் நீங்கள் தடிமனான சானிட்டரி பேடுகளை உபயோகிக்க வேண்டி வந்தாலோ, உங்கள் மருத்துவரை அணுகவும்.

    சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது(Increasing Your Chances Of Vaginal Birth in Tamil)

    சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவது என்பது உங்கள் உடல்நலம், உங்கள் குழந்தையின் உடல்நலம் மற்றும் பிரசவத்தின் போது என்ன நிகழ்கிறது ஆகியவை உள்ளிட்ட பல விஷயங்களை பொறுத்தது. எப்போதுமே உங்கள் மருத்துவரிடம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. சுகப்பிரசவமாகும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு நீங்கள் சில காரியங்களை கூட செய்யலாம்.

    இதையும் படிக்கலாமே! - பாதுகாப்பான சுகப் பிரசவத்திற்கான சில டிப்ஸ்

    1. ஆரோக்கியமான பிரசவத்திற்கு முயல்வது (Try for a healthy pregnancy)

    கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவினை உண்டு, சுறுசுறுப்பாக இருப்பது, உங்கள் உடலை சீராகவும், நன்றாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவும். மேலும், ஆரோக்கியமான உடல்நலனை பேணுவதும் சுகப்பிரசவமாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    2. கர்ப்ப காலத்தில் தொடர்ச்சியாக நல்ல பராமரிப்பில் இருக்கவும் (Choose for continuity of care in pregnancy):

    உங்கள் கர்ப்ப காலம் முழுவதும், பிரசவம் மற்றும் குழந்தை பிறப்பு ஆகியவற்றில் துணையாக இருந்து உங்களை கவனித்துக் கொள்ளும் பேறுகால உதவியாளர் அல்லது பேறுகால உதவியாளர்களின் குழுவை வைத்துக் கொள்வது, சுகப்பிரசவமாகும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இது தான் தொடர்ச்சியான பராமரிப்பு எனப்படுகிறது.

    3. உங்களை ஆதரிக்கும் நபர்களை அருகில் வைத்துக் கொள்ளவும் (Have more support people with you):

    உங்களை தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்கிற, நீங்கள் சௌகரியமாக உணரும் ஒரு நபரை அருகில் வைத்துக் கொள்வதும் சுகப்பிரசவமாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும். அது உங்கள் பேறுகால உதவியாளராகவோ, குடும்ப நபராகவோ அல்லது துணைவராகவோ இருக்கலாம்.

    4. பிரசவத்தின் போது திடமாகவும், நிமிர்ந்தும் இருக்கவும் (Stay solid and upright during labour):

    பிரசவத்தின் போது, சுறுசுறுப்பாக இருப்பதும், நல்ல நிலைகளில் இருப்பதும் உங்கள் பிரசவத்தை முன்னடத்தி செல்வதற்கும், சுகப்பிரசவமாகும் வாய்ப்புகளையும் மேம்படுத்தும். ஏனென்றால் ஈர்ப்பு விசை உங்கள் குழந்தையை கீழ்நோக்கி நகர்த்தி, உங்கள் தசைகளை தளர்த்த உதவும், இதன் மூலம் உங்கள் குழந்தையானது பிறப்பு வழித்தடத்தின் வழியாக எளிதாக நகர முடியும். பாய்கள், பீன் பைகள், மெத்தைகள், தண்ணீர் அல்லது பர்த் பால்ஸ் போன்றவை பிரசவத்தின் போது சௌகரியமான நிலையை கண்டறிவதற்கு உதவியாக இருக்கும்.

    5. அமைதியான, நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கவும் (Build a calm and positive birth environment):

    உங்கள் பிரசவத்தையும், நீங்கள் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதையும் உங்கள் சுற்றுப்புறச் சூழல்களும் பாதிக்கக் கூடும். சரியான பிரசவ சூழ்நிலை என்பது நீங்கள் பாதுகாப்பாகவும், ஆசுவாசமாகவும், உற்சாகமாகவும் இருக்க உதவும் இடம் தான். மேலும் வலி நிவாரணத்திற்கு வசதியுள்ளதாகவும், சௌகரியமாகவும், நன்கு ஒத்துழைப்பு தரும் இடமாகவும் இருக்க வேண்டும். சரியாக திட்டமிட்டு தயார் செய்யும் போது, இது போன்ற சூழ்நிலையை நீங்கள் மருத்துவமனை வார்டு அல்லது குழந்தை பிறப்பு மையத்திலேயே தோற்றுவிக்கலாம். உதாரணத்திற்கு, இசை, மெத்தைகள், அரோமா தெரபி, உணவு, சௌகரியமான உடை, ஆசுவாசப்படுத்தும் இசை அல்லது பிற பொருட்களை நீங்கள் வீட்டில் இருந்து எடுத்து வரலாம். இவை எல்லாம் பிரசவத்தின் போது உங்களை அமைதியாக இருப்பதற்கு உதவுவதால், சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    6. பிரசவத்திற்கும், குழந்தை பேற்றுக்கும் தயார் செய்து கொள்ளவும் (Prepare for labour and birth):

    பிரசவ வலியின் போதும், பிரசவத்தின் போதும் என்ன நடக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளும் போது, நீங்கள் கட்டுப்பாடோடும், ஆசுவாசமாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இது போன்று உணர்வதால், நீங்கள் எதிர்பார்க்கும் சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தை பிறப்பு வகுப்புகள் பிரசவ வலி, பிரசவம், வலி நிவாரண விருப்பத் தேர்வுகள் போன்ற பல விஷயங்கள் குறித்த விவரமான தகவல்களை அளித்து உங்களை தயார் செய்வதற்கு உதவுகிறது. பிறப்புத் திட்டத்தை உருவாக்குவது கூட உங்களை பிரசவத்திற்கும், குழந்தை பிறப்பிற்கும் தயார் செய்வதற்கு உதவும்.

    உங்கள் பிறப்புத் திட்டத்தில், பிரசவத்தின் போது நீங்கள் அருகில் வைத்திருப்பதற்கு எண்ணும் நபர்கள், வலியை கையாள்வதற்கு உங்களின் விருப்பத் தேர்வுகள், பிரசவ சூழ்நிலையில் உங்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், நீங்கள் தவிர்க்க விரும்பும் வழிமுறைகள், மற்றும் தொப்புள் கொடியை அறுக்கும் நபர் போன்றவற்றை குறித்துக் கொள்ளலாம். ஆயினும், உங்கள் குழந்தையின் திட்டம் உங்களுடைய திட்டத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும். எனவே பிறப்புத் திட்டத்தை ஒரு வழிகாட்டுதலாக கருதிக் கொண்டு, இணக்கமாக இருக்கவும். ஏனென்றால், உங்கள் பிரசவ நாளில் உங்களுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதும், என்னென்ன வேண்டும் என்பதும் மாறக் கூடும்.

    சுகப்பிரசவம் குறித்து உங்கள் மருத்துவரை நீங்கள் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும்?(What Questions Should You Ask Your Doctor About A Vaginal Delivery in Tamil)

    நீங்கள் முதல் முறையாக குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, சுகப்பிரசவத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஒவ்வொரு தனி நபரை போலவே, ஒவ்வொரு பிரசவமும் தனித்துவமிக்கது, வித்தியாசமானது. எனினும், பெண்கள் தங்கள் மருத்துவரை கேட்க விரும்பும் சில பொதுவான கேள்விகள் பின்வருமாறு:

    • சுகப்பிரசவத்தின் அபாயங்கள் என்னென்ன?

    • எப்போது வெளித்தள்ள வேண்டும் என்பதை நான் எப்படி புரிந்து கொள்வது?

    • பெண்ணுறுப்பு கிழிந்து போவதன் அபாயத்தை நான் எப்படி குறைப்பது?

    • பிரசவ வலி தொடங்குவதை நான் எப்படி உணர்வது?

    • மருத்துவமனை அல்லது பிறப்பு மையத்திற்கு நான் எப்போது செல்வது?

    • சுகப்பிரசவத்திற்கு பிறகு குணமாவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

    • வழக்கமான சுகப்பிரசவமாகும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    முடிவுரை (Conclusion)

    குழந்தை பெற்றுக் கொள்வது மகிழ்ச்சிகரமான, வாழ்வையே மாற்றும் ஒரு நிகழ்வாகும். ஒரு தனிநபரை போலவே, ஒவ்வொரு கர்ப்ப காலமும், பிரசவ வலியும், பிரசவமும் தனித்துவமானது. நீங்கள் எதிர்கொள்ளும் வரையில் என்ன நேரும் என்று தெரிந்து கொள்வது சவாலானதாக இருக்கும், ஆனால் உங்கள் மருத்துவரிடம் பேசி, சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்வது உங்களை தயார் செய்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். பொதுவாகவே சுகப்பிரசவம் குறைவான அபாயம் உள்ளதாகவும், பெரிதும் வெற்றிகரமானதாகவும் இருப்பதால், இது தான் பெரும்பாலோரால் விரும்பப்படும் பிரசவ முறையாக கருதப்படுகிறது. எனினும், சுகப்பிரசவத்தை தேர்வு செய்த பின்னரும் கூட, திட்டமிட்ட படி காரியங்கள் நடைபெறாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன, இந்த சூழ்நிலையில் மருத்துவர் அவசர நிலையில் சிசேரியன் செய்ய வேண்டியது வரும். எந்தவொரு சிக்கல் ஏற்பட்டாலும் அதற்கான தீர்வுகளை தருவதற்கும், உங்கள் ஆரோக்கியமான குழந்தையை இந்த உலகிற்கு கொண்டு வருவதற்கும் உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.

    Reference

    1. Desai NM, Tsukerman A. (2022). Vaginal Delivery. NCBI

    Tags

    What is normal delivery in Tamil, Vaginal Delivery in Tamil, Why vaginal delivery is better in Tamil, Disadvantages of Vaginal delivery in Tamil, What are the advantages of Vaginal delivery in Tamil, What are the disadvantages of Vaginal Delivery in Tamil, What is the difference between Vaginal Delivery and C Section Delivery in Tamil, How to choose between Vaginal Delivery and C Section Delivery in Tamil, Why Should You Choose A Vaginal Delivery in English, Why Should You Choose A Vaginal Delivery in Telugu, Why Should You Choose A Vaginal Delivery in Tamil, ⁠Why Should You Choose A Vaginal Delivery in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்பிணி பெண்கள் பெயிண்ட் அடிக்கலாமா? | Can pregnant women paint in Tamil

    Image related to PCOS & PCOD

    PCOS & PCOD

    PCOS உடன் கர்ப்பம் தரிப்பது எப்படி: பெண்களுக்கான இறுதி வழிகாட்டி I How to Get Pregnant with PCOS: The Ultimate Guide for Women in Tamil

    Image related to Infertility

    Infertility

    அடைப்பு ஏற்பட்ட ஃபலோபியன் குழாய்கள்: அவை உங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன I Blocked Fallopian Tubes: How They Affect Your Chances of Conceiving in Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்ப காலத்தில் வெப்ப அரிப்பு : காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு I Heat Rash During Pregnancy: Causes, Symptoms and Prevention in Tamil

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் பாகற்காய் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் I Bitter Gourd During Pregnancy: Benefits and Precautions You Should Know in Tamil

    Image related to Fertility

    Fertility

    ஃபோலிகுலர் ஆய்வைப் புரிந்துகொள்வது: பெண் கருவுறாமைக்கான விரிவான வழிகாட்டி I Understanding Follicular Study: A Comprehensive Guide to Female Fertility in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.